பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் - பாதுகாப்பு செயலாளர்

ஜூன் 18, 2020
  •  ஊழலில் ஈடுபட்ட  சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்   முன்னெடுக்கப்பட்டுவருகின்றன
  •  சிறையிலுள்ள பாதாள உலக குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேண  வேண்டாம் என வலியுறுத்தல்
  • சிறையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகளை அரச புலனாய்வுத்துறை   பகுப்பாய்வு
  • அனைத்து கைதிகளையும் சமமாக நடத்த கோரிக்கை
     

     

சிறைச்சாலைகளில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தண்டனை பெற்ற பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் எனவும் பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன எச்சரிக்கை விடுத்ததோடு சிறைச்சாலைகளில் உள்ள பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கெதிராக சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

"ஊழல் மற்றும் பாதாள உலக குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணிய சிறைச்சாலை அதிகாரிகள் மீது ஏற்கனவே நாம் விசாரணையை ஆரம்பித்துள்ளோம். இதுபோன்ற அதிகாரிகள் மீது தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுவதானது,  எங்கள் மீது பழி ஏற்படுவதை தவிர்பதற்கான நடவடிக்கை அல்ல” என சுட்டிக்காட்டிய அவர், அதிகாரிகள் மீது  மிரட்டல் விடுப்பதற்காக இந்த விடயத்தை நான் கூறவில்லை; மாறாக, தங்கள் கடமையை, கௌரவமான  முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஊழலற்ற மற்றும் கௌரவமான சேவையை எதிர்பார்ப்பதாக மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மத்தியில்  இன்று (ஜூன், 18) கொழும்பில்  உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்,  பாதாள உலக குற்றவாளிகளிடம் சிக்காமல் ஊழலற்ற சிறைச்சாலைகள் முறைமையை உருவாக்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் தமது மனசாட்சிக்கு அமைய சேவையாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

"வெலே சுதா அல்லது கஞ்சிபானை இம்ரான் போன்ற திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களினால் வழங்கப்படும் பணத்தினை உங்களது குழந்தைகளின் உணவு மற்றும் கல்வித்தேவைகளுக்கு பயன்படுத்தி மரணப்படுக்கையின் போது உங்களது மனநிம்மதியை சீர்குலைக்க இடமளிக்க வேண்டாம். நீங்கள்  ஓய்வு பெறும் போது இதற்காக வருத்தப்படவேண்டிய நிலை ஏற்படும்  எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதி அமைச்சின் கீழ் சிறைச்சாலை திணைக்களம் இயங்கினாலும், நாடு தழுவிய சிறைச்சாலைகளில் உள்ள 27,000 க்கும் மேற்பட்ட கைதிகள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதால், திணைக்களம் தொடர்பான விடயங்களில் தலையிடுவதற்கு தனக்கு உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

     

 

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக விஷேட அதிரடிப்படை வீரர்கள்  உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆபத்துக்களை எதிர்நேக்குகின்றனர் என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்,  எதிர்கால சந்ததியினர் வாழ குற்றச் செயல்களற்ற ஒரு சட்டபூர்வமான சூழலை உருவாக்குவதில் சிறை அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாகவும்  விபரித்தார்.

"உங்கள் மத்தியில் நேர்மையான  அதிகாரிகள் மற்றும்  ஊழல் செய்த அதிகாரிகள் என பலர்  உள்ளனர் என்பது பொதுமக்களிடத்தில் காணப்படும் பொதுவான கருத்தாகும். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சிறைச்சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் திட்டமிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் சிறைச்சாலையில் இருந்தே முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்ட அவர், சிறைச்சாலைகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அரச புலனாய்வுத்துறை  பகுப்பாய்வு செய்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை  இனங்கண்டு அவற்றை சரிசெய்து அவற்றின் மூலம் சிறைச்சாலைகள் முறைமையினை வலுப்படுத்தி  எவ்விதத்திலும் தவறுகள் உள்நுளையாதவாறு தொடர்ந்து செயற்படுமாறு பாதுகாப்புச் செயலாளர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இன்று நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் முறைமை மிகவும் மோசமடைந்துள்ளது. போதைப் பொருள் பாவனையாளராக சிறைக்குள் வரும் நபர் ஒருவர் சில மாதங்களுக்கு பிறகு சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் போது போதை பொருள் வியாபாரியாக வெளியேறுகின்றார்.

இந்த முறைமையில் எங்காவது ஒரு இடத்தில் தவறு இருக்கின்றது.  இது தொடர்பில் கதைத்து வேலையில்லை யாருடைய தவறு என்று உங்களது நெஞ்சில் கைவைத்து  கேளுங்கள் உங்களது அதற்கான பதிலை  மனசாட்சி சொல்லும் என தெரிவித்த மேஜர் ஜெனரல் குணரத்ன, ஒரு நாள், மரியாதைக்குரிய, பெருமையான ஒரு தொழிலின் உறுப்பினராக, சிறைச்சாலை சேவையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், கைதிகளை சமமாக நடத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். " சிறைகளில் உள்ள பெரும்பாலான கைதிகள் அப்பாவிகள். எனவே  அனைத்து கைதிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒருவர் தரையில் அசௌகரியமாக உறங்கும்போது, மற்றொருவர் இரட்டை அடுக்கு மெத்தையில் சொகுசாக தூங்க முடியாது. அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனையுடன் செயற்படுங்கள், இதன் காரணமாக அவர்கள் இதய பூர்வமாக உங்கள் மீது அன்பு கொள்வார்கள்." என  அவர் தெரிவித்தார்.

உண்மையாக சேவை செய்யும் உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தல்களையும் சங்கடங்களையும் எதிர்கொள்வார்கள், ஆனால் அவர்களை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சு இருப்பதால் அவர்களின் செயற்பாடுகளில் இருந்து ஒருபோதும்  பின்வாங்கமாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி மரீனா மொஹம்மட் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உட்பட சிறைச்சாலை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.