யாழ் படையினரின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் தெற்கு மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம்

பெப்ரவரி 13, 2019

யாழ் பாதுகாப்பு படையினரால் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாட்களைக்கொண்ட பயிற்சி முகாமில் 30 யாழ் பாடசாலைகளில் இருந்து சுமார் 750 மாணவர்களும் மற்றும் தென் பகுதியை சேர்ந்த பாடசாலைகளில் இருந்து 200 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி முகாம் வடக்கு மற்றும் தெற்கு மாணவர்களிடையே நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வினை வலுப்படுத்தும் வகையில் யாழ் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இப் பயிற்சி முகாமின் மூலம் பாடசாலை மாணவ, மாணவிகள், தேசிய மாணவ படையணி மற்றும் மேற்கத்திய வாத்தியங்களை இசைத்தல் தொடர்பான அறிவு மற்றும் திறண்களை பெற்றுக்கொண்டனர்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இப் பயிற்சி முகாமில், யாழ் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய மாணவ படையணி (NCC) இன் பயிற்றுவிப்பாளர்களினால் குறித்த பாடநெறிகள் தொடர்பான வழிகாட்டல், அறிவுறுத்தல் மற்றும் உதவிகள் என்பன வழங்கப்பட்டன.

இதேவேளை, முல்லைத்தீவு கரப்பந்தாட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பயிற்சி முகாமில் விளையாட்டு ஆசிரியர்கள் , பாடசாலை மற்றும் உள்ளூர் விளையாட்டு கழகங்களின் பயிற்றுவிப்பாளர்கள், வீர வீராங்கனைகள் உள்ளிட்ட 300ற்கு மேற்பட்ட கரப்பந்தாட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாமிற்கு இராணுவ கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டு அவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.