வெலிசர கடற்படை முகாம் 59 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறப்பு

ஜூன் 23, 2020

கொரோனா வைரஸ் பரவல் காராணமாக மூடப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் வெலிசர முகாம் 59 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதன் நடவடிக்கைகளை இன்று (23) ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றற்ற கடற்படை முகாமாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட  பரிந்துரைகளுக்கு ஏற்ப சுகாதார வழிகாட்டலின்கீழ் அதன் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமான்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம்  22 ஆம் திகதி முதலாவது கொரோனா தொற்றாளராக  கடற்படை சிப்பாய் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த முகாம் முற்றாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 786 கடற்படை வீரர்கள் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதுடன், சுமார்  112 பேர் மட்டுமே தற்போதும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

குறித்த கடற்படை வீரர்கள் மிக விரைவில் குணமடைந்து செல்வார்கள் என எதிர்பார்ப்பதுடன், அவர்கள் தமது அன்றாட கடமைககளில் ஈடுபடுத்தபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.