காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

பெப்ரவரி 17, 2019

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் (பெப்ரவரி, 16) உதவியளித்துள்ளனர். இம்மீனவர் கடந்த வியாழக்கிழமையன்று 'சங்க 1' எனும் மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மீனவர் ஆழ் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடபட்டிருந்தவேளை காயத்திற்குள்ளானார்.

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சுகயீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டுவருவதற்காக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டது.

சங்கமன்கந்த கலங்கரை விளக்கிலிருந்து இருந்து சுமார் 84கடல் மைல் தொலைவில் இம்மீன்பிடி படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகு மீட்பு பணிக்காக விரைந்தது.

பின்னர் பாதிக்கப்பட்ட நபர் கரைக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.