பாதாள உலகு, போதைப் பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்க உயர் பொலிஸ் அதிகாரிகள் செயற்பட வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
ஜூன் 30, 2020- மோசமான அதிகாரிகள் பொலிஸ் சீருடை தொடர்பில் வெட்கப்பட வேண்டும்
- அரசியல்வாதிகளிடம் “நல்ல பிள்ளை” என பெயர் எடுப்பது கௌரவமல்ல
- சீருடையை பாதுகாக்க அர்ப்பணிப்பு அவசியம்
போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் அது அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதில் வெட்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
தாம் சேவையாற்றும் பிரதேசத்தில் காணப்படும் எந்தவொரு அழுத்தங்களுக்கு அடிப்பணியாது, தமது சீருடையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டவிரோத செயற்பாடுகள் பாரிய அளவில் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம். இங்கு இடம்பெறும் தவறுகளினால் அந்தந்த மாகாணங்களில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடக்கம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வரையான சகல பொலிஸ் அதிகாரிகளும் பொறுப்புக் கூறலிலிருந்து நழுவ முடியாது மாறாக குறித்த மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் அழைக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.தமது கடமைகளை ஏனைய தொழில் போல கணக்கெடுக்க வேண்டாம். இந்த நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை மற்றும் தரம் உங்களின் கரங்களிலேயே உள்ளது. நாட்டில் பாரிய அனர்த்தங்கள், பயங்கரவாதிகள் அல்லது எதிரிகளின் அச்சுறுத்தல்கள், இயற்கை அனர்த்தங்களான வெள்ளப் பெருக்கு, மண்சரிவு அபாயம் மற்றும் கொவிட் போன்ற அசாதாரண நிலைமைகளின் போது முன்வந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு நாட்டிலுள்ள இராணுவத்திற்கு உள்ளது.
நீங்கள் தான் நாட்டு மக்களின் மனோ நிலமையை உணர்ந்து அவர்களது வாழ்க்கை தொடர்பில் பொறுப்பு கூறக்கூடியவர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் விசாலமானது என்றார்.அதிகமான பொலிஸ் அதிகாரிகள் மிகவும் கௌரவமான முறையில் சேவையாற்றுபவர்கள் என்பது தெரியும் அவற்றை நாங்கள் பாராட்டுகின்றோம். என்றாலும் சில பொலிஸ் அதிகாரிகள் அகொளரவமான முறையில் நடக்கின்றமை கவலைக்குறிய விடயமாகும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
அதிகமான பொலிஸ் பிரிவுகளில் மக்களுக்கான சேவைகள் சரிவர நிறைவேற்றப்படுவதில்லை பொலிஸார் பொறுப்பற்ற விதத்திலும் பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுப்படும் நபர்களுடன் தொடர்புகளை பேணிவருது தொடர்பிலும் தனக்கு கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் அவர்களே! பொலிஸாரிடம் எவ்வளவு சொன்னாலும் ஒன்றும் நடப்பதில்லை நாங்கள் போதைப் பொருள் வியாபாரிகள் தொடர்பில் தகவல் கொடுத்தவுடன் போதைப் பொருள் குற்றவாளிகள் எம்மை வந்து அச்சுறுத்துகின்றனர். குடும்பத்தையே இல்லாமல் ஆக்குவதாக கூறுகின்றனர். இவ்வாறான நிலைமையே நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்பட்டால் பொலிஸாரின் கௌரவம் என்ன? இது தொடர்பில் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு கடிதங்களை காண்பித்து பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய உயர் அதிகாரிகள் இவ்விடத்தில் இருப்பார்கள் அவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும். பொலிஸ் நிலையங்களில் பொலிஸாரின் பாதுகாப்புடன் எந்த ஒரு அச்சமும் பீதியும் இல்லாமல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்டடிருந்த நேரங்களிலும் இரவு பகல் பாராமல் போதை பொருட்களை விற்பனை செய்கின்றனர. சிறார்கள் கூட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தி போதைப்பொருட்களை விநியோகித்து வருகின்றனர். வடக்கின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் மற்றுமொரு அதிகாரியுடன் இணைந்து பணத்தை பெற்றுக் கொண்டு சட்டவிரோதமான நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றார் என தனக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்பட்ட கடிதம் மூலம் அந்தந்த பிரதேசங்களில் பொலிஸ் பிரதேசங்களில் நடைபெறும் பாதாள உலக செயற்பாடுகள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக அறிக்கையினை தயார் செய்து பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மூலம் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
எனினும் இரண்டரை மாதங்கள் கடந்த கடந்துபோதிலும் இதுவரை அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவே, இது தொடர்பில்; கடுமையான முறையில் ஆராயுமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார். அந்தக் கடிதத்தை நடைமுறைப்படுத்த இரண்டு மாதம் எடுக்குமானால் எவ்வாறு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது என வினவிய பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அமைச்சு அல்லது பொலிஸ் மா அதிபரிடம் இருந்து கிடைக்கப்பெறும் எந்த ஒரு தகவலையும் ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு தகவல்களாக எடுத்துக் கொள்ளாமல், தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்புக்கூறும் அதிகாரிகள் என்ற வகையில் பொலிஸ் அதிகாரிகள் பொது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தக்கூடிய முக்கிய அதிகாரிகள் என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்.
நான் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்ததை உங்களிடமும் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் இன்று தொடக்கம் உங்களது கடமைகளை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும். யாராவது உங்களது கடமைகளை முறையாக முன்னெடுக்க தடையாக இருந்தால் அது தொடர்பாக என்னிடம் தெரியப்படுத்துங்கள். இன்று உங்கள் அனைவரையும் இந்த அமைச்சில் சந்தித்ததின் நோக்கம் நீங்கள் அணிந்துள்ள சீருடையின் கௌரவத்தைப் பேணிப் பாதுகாத்து இன்று முதல் தங்களது பணிகளை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதற்காகும். அது உங்களது பொறுப்பாகும். உங்களது பொறுப்புக்குட்பட்ட பிரிவின் கிழ் எந்தவொரு அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்க முடியாது. பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பாக தங்களது கவனத்தை செலுத்த வேண்டும்.
தனிப்பட்ட முறையில் தான் பெயரை பெற்றுக் கொள்வமதற்காகவும் தான் சுயலாபம் அடைந்து கொள்வதற்காகவும் அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து தமது கடமைகளை செய்தாலும் எந்த அதிகாரியும் சிறந்த அதிகாரியாக ஆக முடியாது என தெரிவித்தார்.
உங்களது அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரதேசத்தில் எந்தவொரு கொலை, கொள்ளை, போதைப்பொருள், கஞ்சா, சாராயம் போன்ற குற்றச் செயல்கள் இடம்பெறுமாயின் அதற்கு நீங்களே பொறுப்பு என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் பன்னிரெண்டு பொலிஸ் நிலையங்கள் உள்ளதாயின் அந்த பன்னிரெண்டு பொலிஸ் நிலையங்களுக்கும் பொறுப்பான பொறுப்பதிகாரிகள் தங்களது நிலையத்தின் கீழுள்ள பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர். பொறுப்பற்ற அதிகாரிகள் யாராவது இருப்பார்களாயின் இது தொடர்பில் எனக்கோ அல்லது பொலிஸ் மா அதிபருக்கோ தெரியப்படுத்துங்கள் என குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர், அவ்வாறு ஏனையோர் தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கும் அதிகாரிகள் தாம் அணிந்திருக்கும் சீருடையின் கௌரவத்தை பாதுகாத்து தங்களுடைய பணிகளை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களினால் கல்கிஸ்சை மற்றும் பாணந்துறை கடற்கரைகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அல்லது குடும்பங்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளது. கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் பாதாள உலக நபர் ஒருவரின் உதவியாளர் சதுப்பு நிலத்தை நிரப்புகின்றார். விசேட அதிரடிப்படையினர் இதனை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் வினவிய போது இது தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்தார். பூங்கொத்து அல்லது பக்கெட்டுகளில் மறைத்து கொண்டு செல்லப்படும் போதை பொருள் தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டிருந்தால் அது யோசிக்கக் கூடிய ஒரு விடயம். பட்டப்பகலில் 4 - 5 கனரக இயந்திரங்கள் மூலம் ஏக்கர் கணக்கில் மண் நிரப்பப்படுவதை அறிந்திருக்கவில்லை என கூற முடியுமா என பாதுகாப்பு செயலாளர் வினவினார்.
ஜனாதிபதி, தனது தேர்தல் அறிக்கையில் 10 முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளார். அதில் தேசிய பாதுகாப்பு ஒரு பிரதான விடயமாகும். அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ள ஒழுக்கம் மிகுந்த பாதுகாப்பான ஒரு நாடு ஒழுக்கம் மிகுந்த, நல்லெண்ணம் கொண்ட, சட்டரீதியான சமூகத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் நோக்கமும் ஒவ்வொரு இலங்கையர்ளும் சுதந்திரமாக அச்சமற்ற நாட்டினை உருவாக்குவது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
கடுவல பிரதேசத்தில் கீரை விற்கும் அம்மா ஒருவரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் கப்பம் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்த போதும் அது பயனில்லை என கருத்து தெரிவித்து தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. 60 - 70 வயது வயோதிபர் ஒருவரே இவ்வாறு கப்பம் கொடுக்காமல் கீரை விற்பனை செய்ய முடியாது என்றால் நாங்கள் இவ்வாறு தேசிய பாதுகாப்பு அல்லது பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக பேசுவது என தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினரை கட்டுப்படுத்துவதற்கு வெகுவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் மக்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் சந்தேகமின்றி வாழ மதுபானம், போதைப்பொருள், இலஞ்சம், கப்பம் பெறல் எனும் குற்றச்செயல்கள் இல்லாது சுதந்திரமாக வாழத் தேவையான நாட்டை கட்டியெழுப்புவது உங்கள் அனைவரினதும் பொறுப்பாகும் என மேலும் தெரிவித்தார். தமது மாகாணங்களில் பாடசாலை மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகினால் அவர்களை அதிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கிய பாதுகாப்பு செயலாளர், கௌரவமான மக்கள் சேவையை செயல்படுத்துவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கடமை நேரத்தில் தமது திறமைகளை வெளிக்காண்பித்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவிலியன் ஒருவருக்கும் பணப்பரிசு உட்பட பாராட்டுச் சான்றிதழ்களையும் பாதுகாப்பு செயலாளர் வழங்கி வைத்ததுடன் 2020 ஜூன் 9ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 7 இலட்சத்து 80 ஆயிரத்து 226 ரூபாய் பெறுமதியான பணக்கொள்ளைச் சம்பவத்தின் போது தமது வீர தீர செயல்களை காண்பித்தவர்களில் ஒருவரான பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தயின் செயற்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.
அதேநேரம், அண்மையில் சொய்சாபுர பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பொலிஸார் மூவர் துப்பாக்கி இருந்தும் எவ்விதமான எதிர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருந்தமை வெட்கமளிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.