சிறைச்சாலை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு தொகை கைத்தொலைபேசிகள் சிறைக்கூடத்தில் கண்டுபிடிப்பு

ஜூலை 03, 2020

சிறைச்சாலை அதிகாரிகள் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை சிறைக்கூடங்களில் 27ஆம் திகதியிலிருந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோத பொருட்கள் உட்பட 16 கைத்தொலைபேசிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.  

சிறைச்சாலையில் இருந்து இயக்கப்படும் இரகசிய போதைப்பொருள் மோசடிகள் குறித்த தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் முழுமையான தேடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலை ஆணையர் (நிர்வாக) சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இணைய ரவ்டர், சில மொபைல் சார்ஜர்கள், சிம் கார்டுகள் மற்றும் செல்போன் பேட்டரிகள் ஆகிய பொருட்கள் குறித்த தேடல் நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மிக மோசமான போதைப்பொருள் வியாபாரியான ‘காஞ்சிபனி இம்ரான்’ என்பவரின் சிறைக்கூடத்திலிருந்து சில மொபைல் போன்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் என்பன விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்தமாதம் (ஜூன்) 16 ம் திகதி, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, போதைப்பொருள் அச்சுறுத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கப்பம் கோரல் போன்ற பாதாள உலக நடவடிக்கைகளை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து சகல  சமூகம் நிம்மதியாகவும்  பாதுகாப்பாகவும் வாழ உறுதிசெய்வதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.