ஜூலை நான்காம் திகதியிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது

ஜூலை 06, 2020
போதைப்பொருள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததன் பேரில் 595 பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர்கள் உட்பட சுமார் 2,120 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இம்மாதம் நான்காம் திகதி நள்ளிரவு முதல் ஐந்தாம் திகதி நள்ளிரவு வரை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட விஷேட குற்றத்தடுப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 
 
இந்த விஷேட நடவடிக்கையின் போது 648 கிராம் ஹெரோயின், 5,068 லிட்டர் சட்டவிரோத மதுபானம், 1.281 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 152 கிராம் ஐஸ் ரக போதை பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
 
எதிர்காலத்தில், நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல், பாதாள உலக நடவடிக்கைகள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் அற்ற பாதுகாப்பான நாட்டில் சுமூகமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.