கப்பல் கழிவுகள் தொடர்பில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நாளை முதல் கண்காணிப்பு

ஜூலை 06, 2020
  • இலங்கையில் கப்பல் கழிவு எண்ணெயின் வருடாந்த சேகரிப்பு 26,904 கன மீட்டர் ஆகும்

 

இலங்கை கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையானது, இலங்கை கடற்படை, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை, இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து நாட்டில் கப்பல் கழிவுகள் தொடர்பில் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஒத்துழைப்புடன் இலங்கை கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இந்த விசேட திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நாட்டில், கப்பல் கழிவுகள் தொடர்பான சேவைகள் சதொடர்பில் அனுமதிப்பத்திரம் பெற்ற 28 ற்கும் மேற்பட்ட வழங்குநர்கள் காணப்படுகின்றனர். நாட்டில் கப்பல் கழிவு எண்ணெய் சேகரிப்பின் அளவு சராசரியாக வருடாந்தம் 26,904 கன மீட்டர் ஆகும். அத்துடன் வருடாந்தம் கப்பல்களிலிருந்து 7404 கன மீட்டர் குப்பைகள் இந்த நிறுவனங்களினால் சேகரிக்கப்படுகிறன.

கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றல்ல எனினும் , ஜனாதிபதி, இந்தத் துறையை மேலும் அதிகமான வருவாய் ஈட்டும் ஒரு துறையாக மாற்றுவதற்கான பயனுள்ள வழிமுறையைஉருவாக்கத் தேவையான பாதையினை பாதுகாப்பு அமைச்சு ஊடாக முன்னெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள கடல் மற்றும் ஏனைய சுற்றாடல் வலயங்களை மாசுபடுத்தாத பொருட்களினை நாட்டினுள் அனுமதிக்கும் வசதிகளை வழங்குவதற்கு கப்பல் கழிவு முகாமைத்துவ செயன்முறையை மறுசீரமைக்க ஜனாதிபதி ராஜபக்ஷ பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"தற்போதுள்ள அமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதை அரசு அறிந்துள்ளது, மேலும் இந்த செயல்முறையை கண்காணிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்சவினால் எனக்கு அறிவுறுத்தப்பட்டடுள்ளது. பெரும்பாலான நாடுகளில், தங்கள் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள், கழிவு எண்ணெய்களை அகற்றுவதற்கு பணம் செலுத்துகின்றன, ஆனால் இலங்கையில், கப்பல் கழிவுகளை நாட்டிற்குள் கொண்டு வர, நாம் பணம் செலுத்துகிறோம்" என இன்று அமைச்சில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கப்பல் கழிவுகளுக்கு அனுமதியளிக்கும் சேவை நிறுவனங்களை வருவாய் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றும் ஒரு பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு, பாதுகாப்பு அமைச்சு வசதிசெய்து, மேற்பார்வை செய்யும் மற்றும் ஆதரவளிக்கும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், செயல்முறையை ஒழுங்குபடுத்துவதில் அனைத்து பங்காளர்களையும் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஒரு வினைத்திறன் மிக்க மறுசீரமைப்பு செயன்முறையை வரைய அனைத்து பங்காளர்களும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக இந்த செயல்முறையை சீராக்குமாறு அவர் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கினார்.

இலங்கையில் எந்தவொரு துறைமுகத்தினுள்அல்லது வெளியிலும் கப்பல் கழிவுகளைப் பெறும் பட்டியலிடப்பட்ட கம்பனிகள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு அனைத்து பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை ஒருங்கிணைத்து, நியமிக்குமாறு, கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தலைவி தர்ஷனி லஹந்தபுரவுக்கு மேஜர் ஜெனரல் குணரத்ன பணிப்புரை விடுத்தார்.

அனைத்து முகவர் நிலையங்களும் ஒரு மையபுள்ளியுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறையை நிறுவவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருமதி. லஹந்தபுர, கழிவுப் பொருட்களைச் சேமித்து வைக்கும் மற்றும் அப்புறப்படுத்தும் இடங்களை கண்காணிப்பதற்கான விரைவான ஆய்வுகள் இந்த துறையை மேலும் பயனுள்ளதாக்க அவசியமானவை எனவும் தெரிவித்தார்.

சாத்தியமான சுற்றுச்சூழல் ஆபத்துகள் மற்றும் கப்பல் கழிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய பகுதிகள் குறித்து கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளரும் ருஹுன பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி. டேர்னி பிரதீப் குமார இதன்போது விளக்கமளித்தார்.

நீர் நிலைகளில் எண்ணெய் நீர் கொட்டுதல், எண்ணெய் நீர் கசிவு மற்றும் எண்ணெய் கசிவுகளில் எண்ணெய் போன்ற எச்சங்கள் போன்றவை கப்பல் கழிவுகளை அவசரமாக கையாளுதல் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்களில் சிலவாகும் என குறிப்பிட்ட கலாநிதி குமார, இலஞ்சம், ஊழல், அரசியல் மற்றும் பாதாள உலக செல்வாக்குகள் ஆகியவை கப்பல் கழிவுகள் சேவைகளை முறையாக கையாளுவதற்குத் தடையாக உள்ளன எனவும் தெளிவுபடுத்தினார்.

கப்பல் கழிவு எண்ணெயை மண்ணெண்ணெயில் கலந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சில முறைகேடுகள் தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார்

இந்த கலந்துரையாடலில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி. ரவிப்ரிய, இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) சமந்த விமலதுங்க, மத்திய சுற்றாட் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜெயசிங்க, சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு காண பிரதி பொலிஸ் மா அதிபர் அணில் பிரியந்த, இலங்கை துறைமுக அதிகார சபையின் ஹார்பர் மாஸ்டர் நிமல் சில்வா, கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.