கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை ஆழ்கடல் நோக்கி வழிநடத்திய கடற்படை
ஜூலை 07, 2020கல்முனை நிந்தவூர் கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கில சுறா ஒன்றினை மீண்டும் ஆழ்கடலுக்குள் வழிநடத்தும் முயற்சிகளை இலங்கை கடற்படையினர்
மேற்கொண்டனர்.
உலகில் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றான இந்த அரிய வகை மீன் இனம் கரை ஒதுங்கியதை அறிந்து கொண்ட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த தென் கிழக்கு கடற்படை கட்டளையக கடற்படை வீரர்கள், அதனை மீண்டும் ஆழ்கடலுக்குள் வழிநடத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்தனர். குறித்த முயற்சிகள் தென் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய உயிரினமாக அறியப்படும் இந்த அரிய வகை மீன், 9000 கிலோ கிராம் எடையையும் 9 மீட்டர் நீளத்தையும் கொண்டது.
குறித்த மீட்பு நடவடிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் அரியவகை உயிரினங்களை பாதுகாக்கும் அமையத்தின் சட்ட விதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.