தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக பொலிஸ் பரிசோதகர் பொலிஸாரிடம் சரண்

ஜூலை 07, 2020

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக பொலிஸ் பரிசோதகர் வெஹரவத்த கன்கனம்லாகே சமன் வசந்த குமார இன்று காலை கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தலைமறைவாக இருந்த 49 வயதுடைய குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியிருந்தனர்.

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 11 பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளை இம்மாதம் 02ம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் உடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட நான்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.