கொத்மலை ஓயாவில் வெடிமருந்து மற்றும் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு

ஜூலை 08, 2020

நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நாவலப்பிட்டிய கொத்மலை ஓயாவுக்கு அருகில் வெடிபொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளது.

கொத்மலை ஓயாவுக்கு அருகில் வெடிபொருட்கள் காணப்படுவதாக அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட குகை ஒன்றில் இருந்து ஒரு கிலோ கிராம் எடையுள்ள வெடிமருந்து, 99 டெடனேட்டர்கள் மற்றும் 8 கண்ணீர் புகை குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட 99 டெடனேட்டர்களும் பாதுகாப்பாக கண்டி பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, ஜூலை மூன்றாம் திகதி கிளிநொச்சி பலே, ஐயக்கச்சி பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலத்த காயம் அடைந்த நிலையில் அநுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (ஜூலை 08) காலை உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர், 44 வயதுடைய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராகும். அவர் வெடிகுண்டு தயாரிக்க முற்படுகையிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியையான உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களது வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் மற்றும் விடுதலைப் புலிகளின் நினைவேந்தலை குறிக்கும் பதாதைகள் என்பன மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.