வெல்லவாய பிரதேசத்தில் யானைகளின் ஊடுருவலைத் தடுக்க 100,000 எலுமிச்சம் கன்றுகள் சிவில் பாதுகாப்பு படையினரால் வழங்கி வைப்பு
ஜூலை 09, 2020யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ஹந்தபானகல பிரதேசத்தில் நடுகை செய்வதற்காக அப்பிரதேசத்தில் வசிக்கும் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு 100,000 எலுமிச்சை கன்றுகள் அண்மையில் வழங்கப்பட்டது. மனித- யானை முரண்பாடுகளை தவிர்க்கும் புதிய முயற்சியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடுகை செய்வதற்கென சிவில் பாதுகாப்பு படையினரால் இந்தக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்திட்டம் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.
இந்த பிரதேசத்தில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எலுமிச்சை மரக் கன்றுகளை நடுகை செய்ய உத்தேசிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் மழைக் காலத்தின் தொடக்கத்தில் நடுகை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ரியர் அட்மிரல் பீரிஸ் தெரிவித்தார்.
எலுமிச்சை மரங்கைளை நடுகை செய்வதானது, எல்லைப்புற கிராமங்களுக்குள் யானை படையெடுப்பைத் தடுக்கும் சிறந்த தீர்வாகும், ஏனெனில் யானைகள்வலிமிகுந்த கூர்மையான முட்கள் நிறைந்த எலுமிச்சை மரங்களின் ஊடாக பயணிப்பதை தவிர்க்கின்றன என இத்திட்டத்தின் முன்னோடியான ரியர் அட்மிரல் பீரிஸ் குறிப்பிட்டார்.
பிராந்தியத்தில் யானைத் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்படக் கூடிய மனித வாழ்விடங்களில் ஒன்றான ஹந்தபானகலவில் இந்த முன்னோடித் திட்டத்தை அமுல்படுத்தும் மொனாராகலை சிவில் பாதுகாப்பு படை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் குமார ஜாகொட, “எதிர்காலத்தில் அனைத்து பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கும் நிரந்தர தீர்வாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்” என குறிப்பிட்டார்.
நாட்டின் வருடாந்தம் யானை மனித முரண்பாடுகளின் காரணமாக 100 தொடக்கம் 125 வரையான உயிர் இழப்புக்கள் ஏற்படுவதாகவும் 250 முதல் 300 வரையிலான யானைகள் மரணமடைவதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் யானைகள் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பொலநறுவை, மொனராகலை மற்றும் வெல்லவாய பிரதேசங்களே அச்சுறுத்தலுக்கு இலக்காகும் பிரதேசங்களாக அடையாளம் கண்டுள்ளதாக, யானைகள் பாதுகாப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.