படையினரால் வடக்கில் உள்ள வலுவிழந்தோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

பெப்ரவரி 21, 2019

யாழ் குட நாட்டில் வசிக்கும் வலுவிழந்தோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் பல படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக வடக்கில் வறுமைக்கோட்டின் வாழ்ந்து வரும் மக்களுக்காக கழிவறைகள் நிர்மாணித்து கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபர் ஒருவரின் நிதியுதவியுடன் 27 புதிய கழிவறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக் கழிவறை நிர்மாண செயற்றிட்டம் உமா நடராஜா அவர்களின் உதவியுடன் யாழ்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் நிறைவு பெற்றதை அறிவிக்கும் நிகழ்வு வல்வெட்டித்துறை கலைவாணி அரங்கில் அண்மையில் (பெப்ரவரி,15)இடம்பெற்றது. மேலும் தேவையுடைய 50 பேருக்கு இவ்வைபவத்தின்போது சக்கர நாற்காலிகளும் வழங்கிவைக்கப்பட்டன

இதேவேளை, வன்னி பிராந்திய இராணுவத்தினர் அப்பிராந்தியத்தில் வசிக்கும் அங்கவீனமுற்ற ஒரு குழுவினருக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோல்கள் என்பனவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர். வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சியானது கிரிஷ்டல் மார்டின் காமன்ட் பீஎல்சீ நிறுவனம் அதன் சீஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாகும். இதற்கமைய 12 சக்கர நாற்காலிகள் மற்றும் 10 ஊன்றுகோல்கள் என்பன தேவையுடைய பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன. இதனை விநியோகிக்கும் நிகழ்வு வன்னி பாதுகாப்புப் படை தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று (பெப்ரவரி, 15) கிளிநொச்சி தம்பிராசா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 55 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், கணனி, நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் வாளிகள் என்பனவும் இப்பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இப் பொதுமக்கள் நலன்புரி நிகழ்ச்சித்திட்டத்தை தெரண தொலைக்காட்சியின் "மானுசாத் தெரண" வின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.