--> -->

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

ஜூலை 14, 2020

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக திம்புலாகல கெகுலுவெல பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் திம்புலாகல பிரதேசத்தில் உள்ள கெகுளுவெல, மல்தெனிய மற்றும் கனிச்சிகல ஆகிய கிராமங்களில் வசிக்கும் 1,575 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நன்மையடையவுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களில் சுத்தமான குடிநீரின்மையினால் ஏற்படும் சிறுநீரக நோய்களை தடுக்கும் தேசிய வேலைத் திட்டத்திற்கு உறுதுணை அளிக்கும் வகையில் இலங்கை கடற்படையினரால் சுகாதார அமைச்சின் நிதி உதவியுடன் சுமார் 752 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலை தெற்கு பிராந்திய கடற்படை பொறுப்பதிகாரி, கொமடோர் பிரசாத் காரியப்பெருமவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வெஹெரகல மகாவலி திட்ட முகாமையாளர், கெகுளுவெல விகாரையின் பிரதம விகாராதிபதி, பிராந்திய அரச அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tamil