சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை இலங்கை இராணுவம் ஏற்பு

ஜூலை 15, 2020

அடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை இலங்கை இராணுவம் ஏற்றுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் அச்சிடப்பட்டு வந்தது. இதற்காக குறித்த தனியார் நிறுவனத்திற்கு பெருமளவு அரச பணம் செலுத்தப்பட்டது.

தற்போது சாரதி பத்திரம் ஒன்றினை அச்சிடுவதற்கு ரூ.1,340 செலவிடப்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், சாரதி அனுமதிப்பத்திரத்தை குறைந்த செலவில் அச்சிட கூடிய வழிமுறைகள் காணப்படுவதாகவும் இவ்வாறான நிலையில், சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை 1,340 ரூபாய் செலவில் அச்சிடுவது என்பதானது ஒரு குற்றம் எனவும் அவர் தெரிவித்தார்.