தனிமைப்படுத்தப்பட்டோர்களுக்காக விஷேட வாக்கெடுப்பு நிலையங்கள் - தேர்தல் ஆணைக்குழு
ஜூலை 16, 2020தனிமைபடுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் அல்லது சுய தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் தமது வாக்குகளை அளிக்கும் வகையில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் சட்ட ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
தேர்தல் இடம்பெறவுள்ள தினத்தில் சுய தனிமைப்படுத்தலில் எவரும் இருப்பார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் அதிகரித்து வருவதால், அத்தகையோர் தங்கள் வாக்குகளை அளிப்பதற்கு வசதியாக நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு நிலையங்கள் நிறுவ வேண்டும். தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளோர் அவர்களுக்காக உருவாக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும்” எனவும் தேர்தல் ஆணைகுழு தலைவர் இதன்போது தெரிவித்தார்
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் ஆகியோருடன் தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழு எதிர்கொள்கின்ற நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு தேர்தல் ஆணைகுழு தலைவர் சுகாதார அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.