புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 16, 2020

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையிலான சம்பிரதாயபூர்வமான சந்திப்பு, பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் பியால் டி சில்வா சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்றதை அடுத்து இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் உலுகேதென்ன கடந்த புதன்கிழமையன்று நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

வைஸ் அட்மிரல் உலுகேதென்ன, 1985ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் 13வது ஆட்சேர்ப்பில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலாசாலையில் அடிப்படை பயிற்சிகளை பூர்த்தி செய்து பயிலுனர் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டார்.

அவர் தனது சேவைக்காலத்தில், படையினரின் துணிச்சலான நடவடிக்கைகளுக்க வழங்கப்படும் ரண சூர பதக்கத்தினை இரண்டு முறை பெற்றுள்ளதுடன் விஷிஸ்ட சேவா விபூஷனய மற்றும் உத்தம சேவா உள்ளிட்ட பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

கடற்படை தளபதியாக நியமிக்கப் படுவதற்கு முன்னர் அவர், இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக 2019, மே மாதம் எட்டாம் திகதி முதல் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.