பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

ஜூலை 16, 2020

ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விமானங்கள் கடத்தப்படல் மற்றும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படல் போன்ற சந்தர்ப்பங்களில் சர்வதேச விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கையில் முதன்முறையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவர் என்ற ரீதியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், ​ மேற்படி புதிய நியமனங்கள் தக்க தருணத்தில் வழங்கப்ப்பட்டுள்ளது எனவும் இவை பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் பாரிய பொறுப்புகளை உள்ளடக்கியது எனவும் வலியுறுத்தினார்.

9/11க்குப் பின்னர் உலகில் விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெளிவுபடுத்திய பாதுகாப்பு செயலாளர், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்படி அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக இன்று நியமனம் பெற்ற இவர்கள் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட பயிற்சிநெறியில் பங்குகொண்டவர்களாவர்..

இந்த நியமனங்கள் அனைத்தும் சர்வதேச சிவில் விமான அமைப்பு உறுப்பு நாடுகளிடையே நடைமுறையில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விதிமுறைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இதற்கமையவே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை பிரதி பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த தெரிவித்தார்.

இந்த நியமனம் தொடர்பில் 2016ம் ஆண்டு முதல் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழு கூட்டங்களின் போது தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பணயக்கைதிகள் தொடர்பாக நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான ஹேக் மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கையும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன் சட்ட விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளின் தொழில்துறை சம்பந்தமான கோரிக்கைகளை பூர்த்தி செய்து அவர்களின் திறன்களை விருத்தி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமிய அபேவிக்ரம உறுதியளித்தார்.