கந்தக்காட்டிற்கு விஜயம் செய்த 114 பார்வையாளர்களுக்கு தொற்று ஏற்படவில்லையென உறுதி

ஜூலை 17, 2020

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிடச் சென்ற குடும்ப உறுப்பினர்கள் 114 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது அவர்களுக்கு தொற்று ஏற்பட வில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் வைரஸ் தொற்றுடையவர்களுடன் தொடர்பைப் பேணிய 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை வைரஸ் தொற்று ஏற்பட்டடுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 13 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,689 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் நால்வர் கட்டார் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் மற்றுமொருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருகை தந்தவர் எனவும் ஏனைய எட்டு பேரும் கந்தக்காடு புணர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 669 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை, 2.007 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.