சிறைச்சாலை அதிகாரிகளினால் 53 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டது

ஜூலை 17, 2020
வெலிக்கடை, கொழும்பு மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகளினால் 53 கையடக்க தொலைபேசிகள் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் பெட்டரிகள் மற்றும் சிம் காட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 
 
வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவுப் பகுதிக்கு அருகில் உள்ள தெமட்டகொட, வனாத்தமுல்ல குடியிருப்பு பகுதியிலிருந்து பதினெட்டு பார்சல்கள் தூக்கி வீசப்பட்டதாகவும் அந்த பார்சல்களில் 38 கையடக்க தொலைபேசிகளும் 254 தொலைபேசி தொலைபேசி பெட்டரிகளும் 05 சிம் கார்டுகளும் காணப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
 
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதியை பிரிக்கும் இடத்தில் தடுப்பாக ஒரே ஒரு சுவர் மாத்திரம் காணப்படுவதால் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெறுவதாகவும் இது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
கொழும்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட மற்றொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைதிகள் வசமிருந்த 15 மொபைல் போன்கள், 02 மொபைல் சார்ஜர்கள் மற்றும் 12 சிம் கார்டுகள் என்பன கைப்பற்றப்பட்டன.
 
இதேவேளை, களுத்துறை சிறைச்சாலையில் பார்சல்களை வீசிய15 நபர்களை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
சிறைச்சாலைகளில் சட்ட விரோத பொருட்களைப் பாவனையின்மையை உறுதிசெய்ய சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடர உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.