அனுமதிக்கப்படாத வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

ஜூலை 17, 2020
  • வாகனங்களை நிறுத்தும் போது “தடை விதிக்கப்பட்ட இடங்கள்” அவதானம் அவசியம்
அனுமதிக்கப்படாத தரிப்பிடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டத்தை இன்று (ஜூலை,17) முதல் அமுல்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நகர்புறங்களில் வாகன நெரிசல்களை குறைப்பதற்காகவும் அனுமதிக்கப்படாத பகுதிகளிலும், நடைபாதை ஓரங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதனால் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையிலும் பொலிஸாரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாத இடங்கள் மற்றும் நடைபாதையின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணிக்க பொலிஸாரினால் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.
 
இதற்கேற்ப, அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்து திணைக்கள கட்டளைச் சட்டத்திற்கமைய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
மேலும் அவர் வாகனங்கள் நிறுத்த தடை என பொறிக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்குமாறு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.