இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

பெப்ரவரி 26, 2019

இராணுத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு புதிய வீடு கிளிநொச்சி ஜயபுரம் பகுதியில் வசிக்கும் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த வீடு தலங்கள ஸ்ரீ சித்தார்த அறக்கட்டளை அமைப்பின் ஸ்தாபகர் வணக்கத்துக்குரிய தலகல ஸ்ரீ சுமனரத்ன நாயக்க தேரோ அவர்களின் நிதி உதவியுடன் கிளிநொச்சி பாதுகாப்புபடை தலைமையகத்தின் படை வீரர்களின் தொழிநுட்ப மற்றும் உடல் உழைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 457500 செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வீடானது இந்து மத மரபுகளுக்கமைய இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ நிகழ்வின் பின்னர் பயனாளியான திருமதி. சதிஸ்கரன் சரஸ்வதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் பயனாளிக்கு வீட்டு உபகரணங்களும் இதன்போது வெகுமதியாக அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அண்மையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள மாகாண இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு அமைய 70 இராணுவ வீரர்களினால் இரத்த தானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.