பாதாள உலக குற்றச் செயல்களுக்கெதிரான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன; கடந்த 48 மணித்தியாலங்களில் நால்வர் கைது

ஜூலை 21, 2020

கடந்த 48 மணித்தியாலங்களில் குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நாடு தழுவிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பாரியளவிளான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த நான்கு பிரதான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கமைய சமிந்த குமார, ஹெட்டியாரச்சிகே ஜகத் குஷான் தில்ருக் எனப்படும் இரு சந்தேக நபர்களும் 'ரொடா‘ மற்றும் 'நளியா'என புனைபெயர் கொண்டு அழைக்கப்படும் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாதாள உலக குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சமயன் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 42 வயதுடைய சமிந்த குமார என்பவர் கடந்த ஞாயிறன்று நவகமுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வேளையில் குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2015 ஆண்டு இடம்பெற்ற கொலைச்சம்பவம் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஹெட்டியாரச்சிகே ஜகத் குஷான் எனும் சந்தேகநபர் நவகமுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

மிரிஹான பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ‘ரொடா‘ மற்றும் ‘நளியா’ ஆகிய சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். பொடி திலின என வாடிக்கையாளர்களால் அழைக்கப்படும்  இவர்கள், ஈஸி கேஷ் பணப்பரிவர்த்தனை மூலம் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வந்தனர்.

மேற்குறித்த சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்