கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணப்பொதிகளை பரீட்சிக்க நவீன சோதனை கருவிகள்
ஜூலை 21, 2020பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றில் பயணப்பொதிகளை பரீட்சிக்கும் வழிமுறைகள், நவீன தொழிநுட்பத்திற்கமைய மேம்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்துக்கு அமைய புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள பயணப் பொதிகளை பரீட்சிக்கும் ரூ. 61மில்லியன் பெறுமதியான எக்ஸ்ரே சோதனைக் கருவிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே வரையறுக்கப்பட்ட இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப்போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) ஜீ ஏ சந்திரசிறி இவ்வாறு தெரிவித்தார்.
சுமார் 19 வருடங்களாக பயணிகள் பொதிகளை பரீட்சிக்க பயன்படுத்தப்பட்டுவரும் சோதனைக் கருவிகள் காலவதியாகியுள்ளதால் அதனை ஈடு செய்யும் வகையில் இந்த புதிய எக்ஸ்ரே சோதனைக் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
பயணப்பொதிகளை பரீட்சிக்கும் இந்நவீன எக்ஸ்ரே சோதனைக் கருவிகள், ஐரோப்பிய சிவில் விமானப்போக்குவரத்து மாநாடு, ஐக்கிய இராச்சிய போக்குவரத்துத் திணைக்களம், அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் தேசிய பாதுகாப்பு தரங்கள் ஆகிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்படுத்தல் நிலைகளை கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில், வரையறுக்கப்பட்ட இலங்கை விமானப்போக்குவரத்து சேவைகளின் பிரதித்தலைவர் ரஜீவசிரி சூரியாராச்சி, இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர், விமானபோக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகளுக்கான பணிப்பாளர் பீ ஏ ஜெயகாந்த மற்றும் வரையறுக்கப்பட்ட இலங்கை விமான போக்குவரத்து சேவைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.