கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படை வீரர்கள் அனைவரும் பூரண குணமடைவு

ஜூலை 21, 2020

வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த கடற்படை வீரர்கள் மூவரும் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் குணமடைந்துள்ளதாகவும் இதற்கமைய கடற்படைக்குள் காணப்பட்ட வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் குணமடைந்து வீடுதிரும்பிய கடற்படை வீரர்கள் சுகாதார வழிகாட்டலுக்கமைய மேலும் 14 நாட்கள் சுய தனிமைபடுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கெப்டன் இந்திக டீ சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாம் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப கடந்த மாதம் 22ஆம் திகதி அதன் வழமையான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.

மேலும், வெளிசர கடற்படை வைத்தியசாலை 77 நாட்களின் பின்னர் இம்மாதம் 10ஆம் திகதிஅதன் வழமையான வெளி நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தது.

வெளிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, ஏப்ரல் 24ஆம் திகதி இலங்கை கடற்படை தனது அனைத்து வைத்தியசாலை நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.