சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமையினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பெப்ரவரி 26, 2019

கண்டி சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடந்த காலத்தில் எமது தேசத்திற்கு சாபக்கேடாக காணப்பட்ட சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கண்டி பொது மருத்துவமனையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தை இன்று (25) மக்களிடம் கையளிக்கும் நிகழ்வினை தொடர்ந்து கண்டி கெடபே விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

அரச நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ளாது முற்றுமுழுதாகவே தேசிய சிறுநீரக நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டில் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்நாட்டின் சிறுநீரக நோயாளர்களுக்காக அரும் பணியாற்றிவரும் விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேகர அவர்களின் பெயரினால் இந்த நிலையத்தை பெயரிடுவதற்கு ஜனாதிபதி அவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட்டதோடு, நோய் நிவாரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும், இதன்போது பௌதீக வளங்களை போன்றே மனித வளங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் அந்நோயினால் அவதியுறும் சகலருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விரிவான வேலைத்திட்டங்களினூடாக இந்நோயினால் பீடிக்கப்படுவதை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழி முறைகளை அவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 07 மாடி சிறுநீரக நோய் பராமரிப்பு நிலையமானது, குருதி சுத்திகரிப்பு பிரிவு, நோயாளர்களுக்கான விடுதி வசதிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 150க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு குருதி சுத்திகரிப்பினை மேற்கொள்ளக்கூடிய வசதி, சிறுநீரக நோயாளர்களை முன்கூட்டியே இனங்காண்பதற்கான பரிசோதனை வசதிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கான தங்குமிட வசதிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் ஏனைய தேவைகளையுடையோருக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் அதேபோன்று சிறுநீரக நோய் நிவாரணத்திற்கான ஆய்வுகூட வசதிகள், சிறுநீரக நோயாளர்களுக்கான ஏனைய சிகிச்சைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கான வசதிகள் என்பவும் இங்கு காணப்படுகின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்டபோது தமது பிரசார நடவடிக்கைகளுக்காக கிடைக்கப்பெற்ற நிதியைக்கொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியமானது தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியினால் பலமான நிதியமொன்றாக விளங்குகின்றது. அந்நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டினால் சிறுநீரக நோயாளர்களின் நலன்பேணல், சிகிச்சைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சிறுநீரக நோய் நிவாரணம் மற்றும் நோய்க் காரணியை கண்டறிதல் தொடர்பான ஆய்வுகளுக்கான பங்களிப்புகளை வழங்குதல், சிறுநீரக நோய் எச்சரிக்கையுள்ள பிரதேசங்களில் சுத்தமான குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கண்டி பொது மருத்துவமனையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிறுநீரக நோய் பாராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் விசேட செயற்திட்டமாக முன்னெடுக்கப்பட்டதோடு, மேலும் இரண்டு நிலையங்கள் அனுராதபுரத்திலும் கிரிதுருகோட்டே பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அனுராதபுர சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தை எதிர்வரும் மாதமளவில் மக்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேகர, சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார். அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வண. ஆனமடுவே சிறி தம்மதஸ்ஸி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து கண்டி கெடபே விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இலங்கையின் ஒட்டுமொத்த சிறுநீரக நோயாளர்களுக்காகவும் சிறுநீரகங்கள் செயலிழக்கும் நோய்க்கான காரணியை கண்டறிவதற்காகவும் அளப்பரிய சேவையாற்றிய, சிறுநீரக நோயினை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேகர அவர்களின் சேவையை பாராட்டி விசேட விருதினையும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

சிறுநீரக நோயாளர்களைக் கொண்ட 670 குடும்பங்களுக்கு உள்ளக நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்குவதனை ஆரம்பித்து வைத்தல், 500 சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியை வழங்குவதனை ஆரம்பித்து வைத்தல், சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டித் தொடரில் வெற்றியீட்டிய கண்டி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியருக்கு பரிசில்களையும், விருதுகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

தேசிய சிறுநீரக நிதியத்திற்காக நிரோகா லொத்தர் சீட்டிழுப்பினால் வழங்கப்படும் பங்களிப்பிற்காக 2019 ஜனவரி மாதத்திற்கான 9.6 மில்லியன் ரூபா காசோலை இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அர்ப்பணிப்பை பாராட்டி கண்டி மாவட்ட சிறுநீரக பாதுகாப்பு சங்கத்தினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட பரிசு வழங்கப்பட்டது.

அத்துடன், கண்டி மாவட்ட சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையத்தினை துரிதமாக நிர்மாணித்து மக்களிடம் கையளிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய இலங்கை இராணுவத்தினரையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும், சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல, கண்டி மாவட்ட செயலாளர் எம்.என்.ஜி.ஜி.திஸ்ஸ கருணாரத்ன, கண்டி மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சமன் ரத்னாயக்க உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

.இதனிடையே உலக சுகாதார நிறுவனத்தின் விசேட மகப்பேற்று பிரிவாக மேம்படுத்தப்பட்டுள்ள பேராதெனிய மருத்துவமனையின் சிறுவர் பிரிவும் புதிய மகப்பேற்று தீவிர சிகிச்சை பிரிவும் இன்று (25) ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

நன்றி: pmdnews.lk