மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
ஜூலை 22, 2020புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பிராந்தியத்தில் கடற்பரப்புக்குள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். எனவே கடலில் பயணிப்போர், மீனவ சமூகம் மற்றும் கடற்கரையோரங்களில் வசிப்போர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
கடல் கொந்தளிப்பாக காணப்படும் வேளையில் கடலலைகள் 2 மீட்டர் தொடக்கம் 2. 5 மீட்டர் வரை மேலெழக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.