கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு செயலாளரால் பாராட்டு

ஜூலை 23, 2020

•    இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக இராணுவ மருத்துவ முதுமாணி கற்கை நெறிஆரம்பம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும்  கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்ததும் செயற்பாடுகளிலும்  இராணுவ மருத்துவ குழுக்கள்  முழு அர்ப்பணிப்புடன் அச்சமின்றி அரசுக்கு சிறந்த ஒத்துழைப்புக்களை  வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாரஹேன்பிடவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (ஜூலை,23) இடம்பெற்ற இராணுவ மருத்துவக் கல்லூரியின் இராணுவ மருத்துவத்துறை முதுமானி கற்கை நெறி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தின்போது காயமடைந்தோருக்கு  சிகிச்சை வழங்கி,  அவர்களின் உயிர்களை பாதுகாத்தன் ஊடாக முப்படைகளின் மருத்துவ குழுக்கள் தமது நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளனர் என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தன, உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளின் போது இராணுவத்தினரே முதலில் நின்று பணியாற்றுபவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அது ஒரு களப் போராகவே அல்லது எந்தவொரு அனர்த்தமாக இருந்தாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சேவையை வழங்குபவர்கள்  இராணுவ மருத்துவர்கள்;  இராணுவ வீரர்களோ அல்லது சிவிலியனோ அது யாராக இருந்தாலும் சரி ஆரம்பம் முதல் இறுதிவரை தமது சேவையை  வழங்குபவர்களாக இராணுவ மருத்துவ பிரிவினர் திகழ்கின்றனர் ” என்று அவர் கூறினார்.

இராணுவ மருத்துவர்களால் வழங்கப்படும் சேவையின் வகி பாகமானது, அரச பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுவதுடன், இதன்மூலம் எந்தவொரு வழக்கமான அல்லது பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும் எனவும்  பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இங்கு சிறப்புரையாற்றிய செயலாளர்,  ஐக்கிய நாடுகளின் பணிகளில் ஈடுபடுவதற்கு இராணுவ மருத்துவ பணியாளர்கள் தேவை எனவும், உலகளாவிய ரீதியில் பல்வேறு நாட்டவர்களுக்கும்  சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை அது வழங்கும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.  

“அங்கீகாரம் கிடைத்தவுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியிலிருந்து பங்கேற்பாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு பன்னாட்டு அமைப்பாக எமக்கு இதை மேம்படுத்த முடியும் எனவும், அவர்களின் சேவைகள் தேவைப்படும் எந்தவொரு நிலையிலும் அவர்களுக்கு சேவை வழங்கும் அதே வேளை, சிறந்த கல்விப் பின்னணியுடன் அவர்களை சேவையில் ஈடுபடுத்துவது அதன் தேவையாக உள்ளது.” எனவும்  தெரிவித்தார்,  மேலும் இராணுவ மருத்துவ துறையில் முதுமானி கற்கை நெறி திட்டத்தை அறிமுகப்படுத்தும் மருத்துவ கல்லூரியை இதன்போது பாராட்டினார்.

முப்படைகளை சேர்ந்த மருத்துவத் துறையின் இளம் தலைமுறையினர்,   உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுதம் ஏந்தும் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தம், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள். தொற்றுநோய்கள் போன்ற முக்கியமான சூழ்நிலைகளின் போது அதனை எதிர்த்துப் போராடுவதற்கான  பரந்த அளவிலான அறிவை வளர்ப்பதற்கு  இப்புதிய கற்கை நெறித்திட்டம் பங்களிப்பு வழங்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கீழ் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இக்கற்கைநெறி  போர், மருத்துவம் மற்றும் தடுப்பு மருந்து ஆகியன முப்படை நிபுணர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதுடன், இராணுவ நெறிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், பேர் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் இராணுவ உளவியல் போன்றன பாடநெறிகள்   இலங்கை இராணுவத்தினாலும், விமான போக்குவரத்து பாடநெறி விமானப்படையினாலும், சுழியோடல் மற்றும் ஹைபர்பாரிக் மருத்துவம் பாடநெறிகள் கடற்படையினராலும் மேற்கொள்ளப்படும்.

இராணுவ மருத்துவ கற்கை நெறியை அறிமுகப்படுத்தியதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவை பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவ மருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முதுமாணி மருத்துவ கற்கை நிலையம் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் பாராட்டினார்.
 
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, உயர்கல்வி தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர், அனுரா திசாநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியும், இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்,பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன,  மருத்துவ முதுமாணி கற்கை நிலைய பணிப்பாளர், பேராசிரியர் செனக ராஜபக்ஷ, சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், மற்றும் மருத்துவ முதுமாணி கற்கை நிலைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.