தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கவனம்

ஜூலை 25, 2020

தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது குறித்து ஆராய்வதற்கு மகாசங்கத்தினர் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தொல்பொருள்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் பாதுகாப்பு படையணியின் உதவியை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நேற்று (24)  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையின் நான்காவது கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு புண்ணியஸ்தளத்தினதும் வரலாற்று மரபுரிமைகளுக்கு அல்லது தொல்பொருள் பெறுமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டது என்பதுடன், அத்தகைய அனைத்து இடங்களும் தேசிய மரபுரிமைகளாக கருதப்பட்டு பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினர்.