கரையோரப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட சாத்தியம் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
ஜூலை 26, 2020புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யுக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.