--> -->

பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது

ஜூலை 27, 2020

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐவரை நேற்று (ஜூலை 26) கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சலுகை வட்டியில் கடன் வழங்குவதாக கூறி தொலைபேசி மூலம் வங்கிக் கணக்கின் விபரங்களை பெற்றுக்கொண்ட சந்தேகநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து 500,000 ரூபாவை மோசடி செய்ததாக பெண்
ஒருவரினால்  கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில்  பிடபெத்த, வெல்லம்பிட்டிய மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30, 39 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் போலியான ஆவணங்கள் மற்றும் போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், வங்கிஅட்டைகள், லேமிண்டிங் மெஷின், ஓட்டுனர் அனுமதிப்பத்திரம்  அச்சிடும் அட்டைகள், போலி ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், ரப்பர் ஸ்டாம்ப், சர்வதேச ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு புதுக்கடை  இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tamil