பொதுமக்களிடமிருந்து தகவல்களை பெற பொலிஸாரினால் அவசர தொலைபேசி இலக்கம், தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிமுகம்
ஜூலை 28, 2020பொதுமக்கள் பொலிசாருக்கு இலகுவாக தகவல்களை வழங்குவதற்காக துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைநகல் இலக்கம் என்பனவற்றை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கமைய "1997" மற்றும் "1917" ஆகிய இரண்டு துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், இதனோடிணைந்த மின்னஞ்சல் முகவரிகள் இரண்டு மற்றும் ஒரு தொலைநகல் இலக்கம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போதைப் பொருள் கடத்தல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சம்பவங்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பாரிய ஊழல்கள்,புலமைச் சொத்து விவகாரங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவுக்கு தெரிவிப்பதற்கு 1997 எனும் துரித அழைப்பு தொலைபேசி இலக்கமும் 1997@Police.lk எனும் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சட்டவிரோத வருமனம், வங்கிக் கணக்குகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், மோசடிகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றின் மூலம் கொள்வனவு செய்யட்ட வாகனங்கள் மற்றும் காணிகள் போன்ற சொத்துக்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்கு 1917 எனும் துரித அழைப்பு தொலைபேசி இலக்கமும் 1917@Police.lk எனும் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிடப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் எழுத்து மூலமாக தகவல்களை சமர்ப்பிக்க விரும்புவோர் தொலைநகல் இலக்கமான 011-2440440யிற்கோ அல்லது பொலிஸ் மா அதிபர், பொலிஸ் தலைமையகம், கொழும்பு 1.எனும் முகவரிக்கோ தபால் மூலம் தெரிவிக்க முடியும்.
இதேவேளை, முறைப்பாடுகளை தெரிவிப்போரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என பொலிசார் உறுதியளித்துள்ளனர்.