கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வெற்றிப்பயணம் ஒரு கூட்டு முயற்சியாகும் - பாதுகாப்பு செயலாளர்
ஆகஸ்ட் 02, 2020கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புலானாய்வு துறையை பயன்படுத்திய உலகின் ஒரே நாடு, இலங்கை மட்டுமாகத்தான் இருக்கும் எனபாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நாட்டின் ஒரு அங்கமாக தொழிற்படும் புலனாய்வுத் துறையை பயன்படுத்தியதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் உயரிய சவால்மிக்க பணியில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
மிலிந்த ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட 'கொரோனா டையரி 2020' புத்தக வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31 ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உறையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போராடும் அனைத்து முன்னணி வீரர்களுக்கும் இந்த புத்தகம் சமர்ப்பணம் என அவர் தெரிவித்தார்.
அனைத்து வளர்ந்த நாடுகளும் கொடூரமான கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர் மண்டியிட்டிருந்த வேளையில், எமது தேசமும் அதனை அச்சத்துடனேயே எதிர்கொண்டது. எனினும் அரசாங்கம், வைரஸ் பரவலை தடுக்கும் வெற்றிகரமான திட்டங்கள் ஊடாக அவற்றிலிருந்து விடுபட்டது என மேஜர் ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டார்.
"கொடிய வைரஸ் பரவலை திறம்பட கட்டுப்படுத்த முடியும் என்பதில் இலங்கை ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. இந்த அனைத்து பெருமைகளும் இந்த பாரிய சவாலை சிறந்த திட்டமிடப்பட்ட வழிமுறைகள், செயற்றிட்டங்கள் ஊடாக எதிர்கொள்ள வழிகோலிய நாட்டின் தலைமகன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையே சாரும் எனக் குறிப்பிட்டார்.
நாட்டில் கொரோனா வைரஸினால் எந்த ஒரு நபரும் பாதிக்கப்படாத நிலையில் இருந்தபோது ஜனாதிபதி ராஜபக்ஷவினால் ஜனவரி 26 ஆம் திகதி வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது என பாதுகாப்புச் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வைரஸ் தொற்றிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளையும் பாதுகாக்க சுகாதாரத்துறையினர் மட்டுமல்லாது முப்படை, பொலிஸ், புலனாய்வுச் சேவை மற்றும் அரச நிறுவனத்தின் அனைத்து நிருவாக இயந்திரங்களும் கூட்டாக இணைந்து இந்த முயற்சியில் தமது பங்களிப்புக்களை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலானது 'இனம்' சார்ந்து மேற்கோள் காட்டப்பட்ட வேளையில், அவர்கள் அதன் மூலமாக பாதிக்கப்பட முன்னர் நாட்டின் புலனாய்வு பிரிவினர் சந்தேகத்திற்குரிய சமூகங்களை பாதுகாக்க வழிவகுத்தனர் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
"சுகாதார அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை சேவைகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கம், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முடக்கியதோடு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் என சந்தேகிக்கக்கூடிய நபர்கள் மற்றும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.