ஜனாதிபதி வர்ண விருது இரு இலங்கை விமானப் படை பிரிவுகளுக்கு வழங்கிவைப்பு

மார்ச் 03, 2019

முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கை விமானப் படையின் 07ஆம் இலக்க மற்றும் 08ஆம் இலக்க படைபிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கியுள்ளார். இந்நிகழ்வு ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில் நேற்று (மார்ச், 02) இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை விமானப் படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வரவேற்றார். இதனிடையே ஜனாதிபதி அவர்கள் விமானப்படையின் இரு படைபிரிவுகளுக்கும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களுக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வர்ண விருதானது இராணுவ அமைப்பில் பெறக்கூடிய மிக உயர் விருதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த விருதானது நாட்டுக்காக ஆற்றிய சேவையினை கௌரவிக்குமுகமாக நாட்டின் தலைவரால் படைப்பிரிவுகளுக்கு வழங்கி வைக்கும் ஓர் உயர் கௌரவ விருதாகும்.

இலங்கை விமானப் படையின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானப்படை டட்டூ – 2019 மற்றும் கல்விக் கண்காட்சியி னையும் ஜனாதிபதி அவர்கள் அன்றையதினத்தில் (மார்ச், 02) திறந்து வைத்தார்.

இக்கண்காட்சி எதிர்வரும் 06ஆம் திகதி வரை இடம்பெற இருப்பதுடன், கட்டணமின்றி இலவசமாக பொதுமக்கள் பார்வையிடு வதற்காக காலை 10.30 மணிக்கு திறக்கப்படும்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, சிரேஷ்ட இலங்கை விமானப்படை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.