பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பத்து இலங்கையர்களுக்கு காயம்
ஆகஸ்ட் 07, 2020பெய்ரூட் வெடிப்பு சம்பவம் காரணமாக காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்கள் சேவையினை முன்னெடுப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , லெபனான் நாட்டு ஜனாதிபதி மைக்கல் அவோனிற்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த தூதரக அதிகாரிகளின் வசிப்பிடங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் அதேவேளை, உலர் உணவுகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
வெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து லெபனான் அரசு, மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன் லெபனானின் உயர் பாதுகாப்பு கவுன்சில் இதனை ஒரு பேரழிவு எனவும் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 4 ம் திகதியிலிருந்து இரண்டு வார காலம் அவசரகால நிலைமை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை லெபனான் முடக்க நிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.