பருத்தித்துறையில் 275கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
ஆகஸ்ட் 12, 2020பருத்தித்துறை கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 275 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.
பருத்தித்துறையில் இருந்து 22 கடல் மைல் தொலைவில் விஷேட ரோந்துப் பணிகளில் ஈடுபட்ட கடற்படையின் அதிவேக தாக்குதல் படகில் இருந்த கடற்படை வீரர்களினால் கடல் நீரில் அமிழ்த்தி வைக்கப்பட்டிருந்த ஆறு கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா, கடல் பரப்புகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மேற்குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.