பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மீண்டும் நியமனம்
ஆகஸ்ட் 13, 2020பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் மீண்டும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையின் பாதுகாப்பு அமைச்சராக செயற்படும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 25 அமைச்சுகளுக்கான செயலாளர்களை இன்று நியமித்தார். இதன் போதே பாதுகாப்பு செயலாளருக்கான நியமனமும் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் சிறந்த களமுனை வீரரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி, 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, இராணுவத்தின் இயந்திரவியல் காலாட்படையணியின் பொறுப்பதிகாரி மற்றும் யுத்த தளபாடங்களுக்கான பொறுப்பதிகாரி ஆகிய உயர்பதவிகளையும் வகித்துள்ளார்.
பிரேசிலுக்கான இலங்கையின் பிரதி தூதுவராகவும் சேவையாற்றியுள்ள இவர், 2016 செப்டம்பர் மாதம் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, புலிகள் இயக்கத்திற்கு எதிராக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கைகள் மற்றும் தனது 35 வருடகால அனுபவத்தையும் உள்ளடக்கி “நந்திக்கடளுக்கான பாதை” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
13 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், குணநலம் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும், 11 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினதும் தலைவராக தற்பொழுது செயட்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.