கடலோர பாதுகாப்பு படை தனது 9ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
மார்ச் 08, 2019அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படை தனது 9ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் மிரிஸ்ஸ தலைமையகம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ரியர் தலைமையகங்களில் சமூக நலன்புரி நிகழ்வுகள், விளையாட்டுக்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளன.
2009ஆம் ஆண்டின் 41 இலக்க இலங்கை கடலோர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தால் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டதுடன், 2010ஆம் ஆண்டு மார்ச் மதம் நான்காம் திகதி இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் தனது செயற்பாட்டு நடவடிக்கைகளை வைபவரீதியாக ஆரம்பித்தது. இந்நிறுவனமானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
"பாதுகாப்பு, பாதுகாத்தல் மற்றும் அமைதியான கடல்" எனும் மகுட வாசகத்திற்கு அமைய கடலோர பாதுகாப்பு படையினர் இலங்கையின் கடல்சார் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல்கள், படகுகள் மற்றும் நபர்களை தேடி கைது செய்யும் அதிகாரமுள்ள ஒரு அதிகார சபை ஆகும்.
இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையானது கடல்சார் வளங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவம் மற்றும் கடல்சார் மாசடைவதை கட்டுப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படை நாடுமுழுவதிலும் உள்ள பிரபல்யமான கடற்கரையோரங்களில் உயிர்காப்பு பிரிவுகளை நிறுவியுள்ளது. இப்பணிகளில் கடலோர பாதுகாப்பு படையின் நிபுணத்துவம் வாய்ந்த உயிர்காப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய இவர்களினால் இதுவரை (01st March 2019) 1248ற்கு மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். மேலும், கடலோர பாதுகாப்ப்பு படையின் கடல் ஆமை குஞ்சுகள் வளர்ப்பு திட்டத்திற்கு அமைய நூற்றுக்கணக்கான ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.