போதைப்பொருள் ஒழிப்புக்கு ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர் முப்படையினரின் கூடுதல் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் – ஜனாதிபதி

மார்ச் 09, 2019

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைப்பொருட்களிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “சுஜாத தருவோ” (கண்ணியமான பிள்ளைகள்) நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஏப்ரல் 03ஆம் திகதி முதல் கல்வி, சுகாதாரம், பொதுநிர்வாகம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் செயற்திறனான முறையில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் முக்கியமானதொரு நிகழ்ச்சித்திட்டமாக போதைப்பொருட்களுக்கு எதிராக முழு நாடும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு ஏப்ரல் 03ஆம் திகதி காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது. அனைத்து பாடசாலை பிள்ளைகளும் தமது பாடசாலைகளிலும் அரச ஊழியர்கள் தங்களது சேவை நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கவுள்ள அந்த நிகழ்வை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கட்சி பேதமின்றி பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகளை போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் பங்காளர்களாக ஆக்கிக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ள “சுஜாத தருவோ” (கண்ணியமான பிள்ளைகள்) நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் ஆளுநர்களுக்கு இதன்போது விளக்கமளித்தார்.

தற்போது விரிவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் இந்த நாட்டில் தனியானதொரு அரசாங்கத்தை நடத்திச் செல்ல இடமளிக்க முடியாதென குறிப்பிட்டார். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தினரை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் கப்பம் பெறும் நடவடிக்கைகள் பற்றியும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அது தொடர்பில் தனது பணிப்புரையின் பேரில் பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

பாடசாலை பிள்ளைகளின் கதிரை, மேசைகள் பற்றிய பிரச்சினை தொடர்பாக இங்கு விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், பாடசாலை பாடப் புத்தகங்களை வழங்குவதைப் போன்று வருடாந்தம் கதிரை, மேசைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம் பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பாக தெரிவித்தார். பாடசாலைகளில் புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட நிர்மாணப் பணிகளை பார்க்கிலும் குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் கதிரை, மேசை தேவைகளை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவமளித்து செயற்படுமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது கல்வி அமைச்சின் செயலாளருக்கும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுத்தார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை அதிகரித்து எதிர்பார்க்கப்படும் பொருளாதார அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இவ்வருடம் அரசியல் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் நிறைவேற்றப்படும் விசேட திட்டங்களின் முன்னேற்றம் பற்றி கண்டறிவதற்கும் தான் விரைவில் அனைத்து அமைச்சுக்களுக்கும் மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.

அமைச்சர் வஜிர அபேவர்தன, மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk