நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று இலங்கை கடற்படை மருந்து விநியோகம்
ஆகஸ்ட் 17, 2020யுத்தத்தின் போது உயிரிழந்த ,காயமடைந்த மற்றும் காணாமல் போன கடற்படை வீரர்களின் குடும்பங்கள் அத்துடன் ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் மருந்துகள் விநியோகிக்கும் புதிய முறை ஒன்றினை இலங்கை கடற்படை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கொழும்பு கடற்படை வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுவருவோர் அவர்களின் மருந்துப்பொதிகளை தமது வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களது வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்படுகிறது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கடற்படை வைத்தியசாலை நாட்பட்ட நோய்களான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக நோய், கர்ப்ப நோய் மற்றும் கண், தோல், நரம்பியல் நோய் மற்றும் மன நோயாளிகள் ஆகியோருக்கு மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இவ்வாறான திட்டமொன்றை இலங்கை கடற்படையினரால் முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பலர் பலனடந்தனர்.