போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தில் முப்படையினரும் இணைவு

மார்ச் 08, 2019

பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று நாட்டில் போதைப் பொருள் பாவனை முற்றாக இல்லாதொழிக்கும் பொருட்டு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக முப்படைத் தளபதிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு முப்படையினர் ஒன்றிணைந்த ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, இரண்டு ஆண்டை இலக்காக கொண்டு நாடு முழுவதிலும் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை போதைப் பொருள் கைமாற்றப்படும் கேந்திர மையமாக இதுவரை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளங்காணவில்லை என்றும், இலங்கை தொடர்பில் அவ்வாறு கூறப்படுவதில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் நிவாராண மற்றும் போதைபொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் பங்களிப்பு, ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுக் காலை (08) நடைபெற்றது.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து உட்பட கடற்படை மற்றும் விமானப் படை பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :-

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு உதவியாக, முப்படையின் புலனாய்வுத் துறையின் பங்களிப்புடன் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஒன்றிணைந்து நடவடிக்கைகள முன்னெடுத்து வருகின்றனர். தரை வழி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கடற்படையினரின் படகுகளும், விமானப் படையின் விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.