போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தின் பணிகளை பூரணப்படுத்த நன்கொடையாளர்கள் ஒத்துழைக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்
ஆகஸ்ட் 20, 2020- 'நிர்மாணிக்கப்பட்டு வரும் 'நவ நிகந்தய' போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திற்கு ரூ. 5 மில்லியன் நன்கொடை
நிட்டம்புவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் புனர்வாழ்வு மைய 'நவ நிகந்தய' கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக அத்தனகல்ல ரஜ மகா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. பண்ணில ஆனந்த தேரோவினால் ரூ. ஐந்து மில்லியன் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (ஆகஸ்ட், 20) ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை வண. பண்ணில ஆனந்த தேரோ, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளித்தார்.
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த பாதுகாப்புச் செயலாளர், விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ள போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தின் மூலம் போதைப்பொருளுக்கு அடிமையான சுமார் 1,000 பேருக்கு புனர்வாழ்வளிக்க கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.
இதன் மூலம் "போதைப்பொருளுக்கு அடிமையானோர் விரிவான புனர்வாழ்வு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் மீண்டும் இணைக்கப்படவுள்ளார்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.
முக்கிய தருணத்தில் வண. ஆனந்த தேரோவினால் அளிக்கப்பட்ட நன்கொடையை பெரிதும் பாராட்டிய பாதுகாப்பு செயலாளர், இந்த பயணத்தில் அனைத்து நன்கொடையாளர்களும் கைகோர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி கடந்த ஜூன் 26ம் திகதி தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் கீழ் நிட்டம்புவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 'நவ திகந்தய' புனர்வாழ்வு கட்டிடத்திற்கான அடிக்கல் மேஜர் ஜெனரல் குணரத்னவினால் நாட்டப்பட்டது.
இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் வைத்தியர். லக்னாத் வெலகெதரவும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.