எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதி
ஆகஸ்ட் 20, 2020எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள் வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இன்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து எளிமையாக நடைபெற்றது
பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன மற்றும் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக ஆகியோர் வரவேற்றனர். பிரதான வாயிலில் பாடசாலை மாணவிகள் மங்கள கீதம் இசைத்து ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.
ஜனாதிபதி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையான காலம் எமக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலப்பகுதியாக இருந்தது. வீழ்ச்சியடைந்திருந்த ஒரு பொருளாதாரத்தையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கு மேலதிகமாக எமக்கு இக்காலப்பகுதியில் முழு உலகையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. நோய்த் தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிநாடுகளினதும் பாராட்டைப் பெற்றது. இந்த ஒன்பது மாதக் காலப் பகுதியில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நாம் நாட்டை நிர்வகித்த முறைபற்றி நாட்டு மக்கள் தெளிவுடன் உள்ளார்கள் என்பதை கிடைத்துள்ள மிகப் பெரும் மக்கள் ஆணை எடுத்துக்காட்டுகிறது என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மேலும் : http://www.pmdnews.lk