--> -->

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு இன்று முதல் விஷேட அதிரடிப்படையினர் – பாதுகாப்பு செயலாளர்

ஆகஸ்ட் 24, 2020

கொழும்பு விலக்கமறியல் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இன்று முதல் (24) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்த ப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ( ஒய்வு ) கமல் குணரத்ன தெரிவித்தார்.  

இச்சிறைச்சாலைகளுக்கு மேலும் பாதுகாப்பை வழங்கி போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறையிலிருந்து கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

வெலிக்கடை சிறை, மகஸின் சிறை, விலக்கமறியல் சிறை மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியன உள்ளடங்கியதால்  வெலிக்கடை சிறைச்சாலை இந்த நாட்டிலுள்ள விசாலமான சிறைச்சாலைகளின் ஒன்றாக காணப்படுகின்றது. இங்கு போதைப் பொருள், கையடக்க தொலைப்பேசி மற்றும் சிம் கார்ட்கள் தினமும் கைப்பற்றப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இச்சிறைச்சாலைகளின் உள்ளே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதும்  கடத்தல்  காரர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கான காரணம் நுழைவாயில் ஊடாகவே சட்டவிரோதமான பொருட்கள் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்படுவது பின்னர் அறிய முடிந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளில் உள்ள குறைபாடுகளை ஆராயும் பொருட்டு   அனைத்து புலனாய்வு துறைகளும் சிறைச்சாலை புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து செயற்படும் வகையில் புதிய முறைமை முன்னெடுக்கப்படதை தொடர்ந்தே  இவைகள் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே  விஷேட அதிரடிப் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

போதைப் பொருள், சிம் கார்ட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்களை எடுத்துச்செல்வதை தடுக்கும் வகையில் இன்றிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் அனைத்து நுழைவாயில்களிலும் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.   

தம்புள்ளையிலுள்ள இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி  மேஜர் ஜெனரல் பிரியந்த செனவிரட்னவினால் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான வைபவத்தில் உரைநிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன,  விஷேட அதிரடிப்படையின் ஒத்துழைப்புடன் சிறைச்சாலைக்குள் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோரல் உட்பட  நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டல்கள் தொடர்பில் வலியுறுத்திய பாதுகாப்பு செயலாளர், இக்குற்றச்செயல்கள் இவ்வாறே நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்திருக்குமேயானால் நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, “இலங்கை சோமாலியாவை போன்ற நிலைமைக்கு தள்ளப்படுவதிலிருந்து பாதுகாத்துள்ளோம்” என்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய நாட்டு மக்களை பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கத்திற்கமைய ஒரு பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கான அனைத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், 53ஆவது படைப்பிரிவின் 25ஆவது ஆண்டு நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைத்தமைக்காக 53ஆவது படைபிரிவின் கட்டளைத்தளபதிக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

நாட்டில் காணப்பட்ட கொடூர பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் சவால்மிக்க காலப்பகுதியில் தான், 53ஆவது படைபிரிவின் 15ஆவது கட்டளைத்தளபதியாக இருந்து ஒத்துழைப்பு வழங்க கிடைத்தமைக்கு  பெருமிதம் அடைவதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.  

மூன்று தசாபதங்களாக காணப்பட்ட யுத்தத்தை முறியடித்து தாய்நாட்டின் அமைதிக்காக தனது படைபிரிவின்  ஊடாக சேவையாற்ற கிடைத்தமை நினைவு கூர்ந்த அவர், கஜபாகு படையணி மற்றும்  53ஆவது படைப்பிரிவு ஆகிய எனது இரு படைப்பிரிவுகளும் சமமான கௌரவத்தை வழங்கியமைக்காக பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் நான் சந்தோசமடைகின்றேன் என்றார்.   

இதன்போது, மேஜர் ஜெனரல் குணரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் பிரியந்த செனவிரட்ன ஆகியோருக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.  

இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா,  இராணுவ பிரதம அதிகாரி உட்பட இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tamil