இராணுவத்தினரால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் சமூக நலத்திட்டங்கள் பல முன்னெடுப்பு

மார்ச் 13, 2019

படையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக கிழக்கில் தேவையுடைய குடும்பத்தினருக்கு இராணுவத்தின் தொழிநுட்பம் மற்றும் உடல் உழைப்பின் மூலம் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தம்பலகம பிரதேசத்தில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டிற்கான நிதியுதவி ஹொரண தலகலை சர்வதேச பௌத்த தியான மத்திய நிலையத்தின் அதிபதி வணக்கத்துக்குரிய தலகலை சுமனரத்ன நாயக்க தேரோவினால் வழங்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை 22வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டப்.ஏ.என்.எம். வீரசிங்க அவர்கள் பயனாளிக்கு வைபவ ரீதியாக கையளித்தார்.

இதேவேளை, பார்வைக் குறைபாடுகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்று கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் பல வழங்கி வைக்கப்பட்டன. தர்மபுரத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பார்வைக் குறைபாடுடைய 570 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது. இத் திட்டத்திற்கான நிதி அனுசரணை மலேசிய மகா கருண பௌத்த சம்மேளனம் மற்றும் இலங்கையை சேர்ந்த வித்யா சிவலோகநாதன் அறக்கட்டளை நிறுவனம் ஆகிய நிறுவனங்களால் வழங்கப்பட்டது.

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விஸ்வமடு, தொட்டியடி, சுண்டிக்குளம், தேரவில், புன்னரவி, மில்வாவனபுரம், பாரதிபுரம் மற்றும் நெத்தலியாறு உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் பலர் நன்மையடைந்துள்ளனர்.

மூக்கு கண்ணாடிகள் விநியோகிக்கும் நிகழ்வில் 57வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய மற்றும் நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.