யாழ் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

மார்ச் 14, 2019

வடபகுதியில் உள்ள சிறார்களின் கல்வித் தரங்களை உயர்த்துவதற்கான படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அர்ப்பணிப்பு மிகுந்த சேவைகளின் ஒரு பகுதியாக தீபகற்ப மாணவர்களின் வீடு மற்றும் பாடசாலைக்கிடையிலான போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் தொலைதூர இடங்களில் வாழும் தகுதியுள்ள மாணவர்களிடையே 50 புதிய சைக்கிள்களை விநியோகம் செய்வதற்காக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் இந்த முயற்சியை மேற்கொண்டனர். இத்திட்டத்திற்கான நிதியுதவி, கொழும்பு புதுக்கடை மஜிஸ்திரேட் நீதிமன்ற சட்டத்தரணிகளின் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டிகளை விநியோகிக்கும் நிகழ்வு யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்ளின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் ,10) இடம்பெற்றது. இந்நிகழ்வில் 51வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன,நன்கொடையாளர் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பயனாளிகளின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

துவிச்சக்கர வண்டி பயணமே இப்பகுதியில் உள்ள மாணவர்களிடையே ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாகும். இதற்கமைய பாதுகாப்புப் படையினர், இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் யாழ்ப்பாணத்தில் தகுதியுள்ள மாணவர்களிடையே 800 க்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறைந்த வருமானத்தைப் பெரும் குடும்பங்கள் தங்கள் கல்வி ஆண்டுகளில் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்வதற்கு இது மிகவும் பயனளிக்கிறது.

நாட்டில் பல பாகங்களிலும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்கள் மூலம் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் குறைந்த வருமானங்களை பெரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைதுள்ளனர். இந்த பிராந்தியங்களில் படையினரால் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான பொது சேவை முயற்சிகளில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டங்களுக்கு சர்வ மத, பொதுநிறுவன துறை மற்றும் தனியார் துறை நபர்கள் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.