கடற்படையினரால் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைச்சர் ராஜபக்ஷவினால் திறந்து வைப்பு
செப்டம்பர் 01, 2020திஸ்ஸமஹாராம தெபரவெவ தேசிய பாடசாலையில் கடற்படையினரால் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் (31) திறந்து வைக்கப்பட்டது.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையமானது, அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த பாடசாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய நீர்ப்பாசன அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் கடற் படையினரால் நிறுவப்பட்டது.
நீண்ட காலமாக சுத்தமான குடிநீருக்கு நிலவிய தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் நிறுவப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 4000க்கும் மேற்பட்ட மாணவர்களும் அப்பிரதேசத்தில் வசிக்கும் பிரதேசவாசிகளும் நன்மையடைய உள்ளனர்.
இந்த நிகழ்வில், தெற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி கொமடோர் பிரியந்த பெரேரா, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கடற்படை அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.