பொலிஸ் விரைவில் மறுசீரமைக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ
செப்டம்பர் 02, 2020
- இலங்ககோன் அறிக்கையினை ஆய்வுக்குட்படுத்திய பின்னர் மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும்
- பொலிசாரின் நலன்புரி மற்றும் தொழில் புரியும் சூழல் மேம்படுத்தப்படும் என உறுதியளிப்பு
- கடுமையாக உள்ளக மேற்பார்வை முறைமையினை பராமரிக்கும் போது பொலிஸ் சேவையில் ஒழுக்கம் மிக முக்கியமானதாகும்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையினை ஆய்வுக்குட்படுத்திய பின்னர் பொலிஸ் சேவை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் சேவையை மருசீரமைப்பதற்கு குறித்த பரிந்துரைகளை அமைச்சு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மருசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமது சொந்த கருத்துக்களை வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், பொலிஸ் சேவையை மேலும் வினைத்திரன்கொண்டதாக மாற்றி அமைக்க அவர்களது கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று (செப்டம்பர், 2) விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ராஜபக்ஷ, பொலிஸ் அதிகாரிகள் சிறந்த முறையில் சேவையாற்றும் சூழலை உருவாக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
“சிறந்த மற்றும் தரமான பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு வழங்க பணியாற்றுவதற்கான சிறந்த சூழல் மற்றும் தொழில் திருப்தி முக்கியமானதாகும்” என அவர் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையாக கட்டிடத்தின் தற்போதைய வெளித்தோற்றத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜபக்ஷ, பொலிஸ் அதிகாரிகளின் நலன்புரிகளை கருத்திற்கொண்டு அவர்களின் சேவையின் மதிப்பை உயர்த்துவதற்காக நாட்டின் பொலிஸ் நிலையங்களின் வெளிப்புற தோற்றங்களை மேம்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களின் நிலை உள்ளிட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளினால் வலுவான கண்காணிப்பு முறைமையை மேற்கொள்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நான் பொலிஸ் சேவையில் இருந்த நாட்களில், எங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் கூட அவற்றை ஆராயும் அளவிற்கு கடுமையான கண்காணிப்பு முறைமையினை மேற்கொண்டிருந்தனர், பொலிஸ் சேவையின் சிறந்த நற்பெயரை பெற இதுபோன்ற முறைமையினை நாங்கள் மீண்டும் கொண்டுவர வேண்டும். இல்லாவிடில் அது அரசிற்கு ஒரு அவப்பெயராக காணப்படும். மக்களின் எதிர்பார்ப்புக்களை அடைய பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் சிறந்த ஒழுக்கத்தினை பராமரிப்பதன் அவசியத்தையும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என எதிர்பார்தே மக்கள் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், எனவே அவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இங்கு தெரிவித்தார்.
பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முறியடிக்க பொலிஸ் அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி தற்போது பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் குறித்த குற்றச்செயல்களுக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வருவம் அதேவேளை, ஊழலில் ஈடுபடும் சில பொலிஸ் அதிகாரிகளை திருத்தி அவர்களை சரியான பாதையில் இட்டுச்சென்று பொலிஸ் சேவையினை மக்கள் நட்பு சேவையாக மாற்றுவது சிரேஷ்ட அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.