கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செப்டம்பர் 03, 2020வளிமண்டலத்தில் நிலவுகின்ற தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழைவீழ்ச்சியும் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் பொதுமக்கள் இது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேல்மாகாணம், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணம் உட்பட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 150 மி.மீ அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், வடக்கு, வட மத்திய, வட மேற்கு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 மி.மீ அளவில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
காற்று, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நிலவும் வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அறிந்துகொள்ள பொதுமக்கள் 117 என்ற இலக்கத்தை டயல் செய்து அனர்த்த முகாமை நிலையத்தை தொடர்பு கொள்வதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.