ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை
செப்டம்பர் 07, 2020நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய இன்று (07) இரவு 9.30 மணி வரை கொழும்பு, காலி களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை தொடரும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் சீதாவாக்கை பிரதேச செயலாளர் பிரிவு, காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவு, களுத்துறை மாவட்டத்தில் பலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகள், கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுப்பிட்டிய மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுக்கை, நாகொடை, எல்பிட்டிய, நியகம, மத்துகம, அகலவத்தை, வலல்விட்ட, இங்கிரிய, ஹொரண, தெரணியகல, அரனாயக்க, கலிகமுவ, எலபத, இரத்னபுரி, கிரியெல்ல, குருவிட்ட மற்றும் அயங்கம ஆகிய பிரதேசங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில், மண்சரிவுகள், தரையில் ஏற்படும் பிளவுகள், ஆழமடைந்த பிளவுகள், மரங்கள் சரிந்து விழுதல், திடீரென தோன்றும் நீரூற்றுகள், சேற்று நீரூற்றுகள், திடீரென நீரூற்றுக்கள், நீர் மூலங்கள் மறைதல் போன்ற தோற்றப்பாடுகள் ஏற்படுமாயின் அவைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இப்பகுதி வாழ் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.